ஒரு நாள்
பூங்காவில் நான்
கரம், வானொலிப்பெட்டியுடன்
சிரம், வானத்தை நோக்கி
சிந்தனை உலகச் செய்திகளுடன்
எனை மறந்து நடந்தேன்....
ஒரு புறம்
யுத்தத்தின் மேல் உள்ள பித்தத்தால்,
தற்கொலைப் படைகளின் தாக்குதலால்
மனிதன்
மனிதத்தை அழிக்கிறானே என்றும்
மறுபுறம்
புயலினால்
மழையினால்
வெயிலினால்
பூகம்பத்தினால்
எரிமலை வெடிப்பினால்
பூமியை சீன்றும் இயற்கை
மனிதனின் ஆதிக்கத்தை
சோதிக்கின்றதே என்றும்
வருத்தம் சித்தத்தை தாக்க
சற்றே நடந்த பாதையை நோக்கினேன்
தாங்கள் அழிக்கப்பட்டதை
சிதைக்கப்பட்டதை
வேரோடு பிடுங்கப்பட்டதை
தெரிவிக்க இயலாமல்
உள்ளே அழுது
வெளியே வாடிக்கொண்டு
மடிந்து கொண்டிருந்த
பூக்கள்
செடிகள்
பூச்சிகள் மற்றும்
பல சின்னஞ்சிறு உயிர்கள்
ஒரு நொடி
மனது வருத்தம் கொள்ள
மறு நொடி
அதனால் என்ன?
நமக்காக தானே இவைகள்
என அறிவு எடுத்துச்சொல்ல
வானொலியை மற்றொரு அலைவரிசைக்கு
மாற்றினேன்
வீட்டை நோக்கி நடந்தபடி!
---------------------------------------
நகுலன்
No comments:
Post a Comment